பெல்லன்வில ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பக்கவாட்டுக் கால்வாயில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற போது முதலை தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை, கானன்வில பிரதேசத்தைச் சேர்ந்த மதுர ஜினேந்திரா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 27 ஆம் திகதி தாமரை மலர்களைப் பறிப்பதற்காகப் பெல்லன்வில ஏரியை ஒட்டிய கால்வாயில் இறங்கிய நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், அன்றைய தினம் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், இன்று (29) பிற்பகல் சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாய்ப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகளால் தடயவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














