ஈரானும் அமெரிக்காவும் ஞாயிற்றுக்கிழமையன்று (20) புதிய அச்சுறுத்தல்களைப் பரிமாறிக்கொண்டன.
ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் அல்லது அதன் தலைமை அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவம் தெரிவித்தது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை தீவிரப்படுத்தியும், ஈரானின் பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளைச் சீர்குலைத்தும், பிராந்திய அளவில் புதிய பதற்றங்களுக்கு வழிவகுத்தும் உள்ள இந்த மோதல், பல மாதங்களாக எந்தத் தீர்வும் எட்டப்படாத ஒரு தேக்க நிலையிலேயே நீடிக்கிறது.
இரு தரப்பிலும் எவரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஒருவருடனான தொலைபேசி உரையாடலில், ஈரான் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் பொருளாதார ரீதியாகச் சீரழிய வேண்டும் அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் கூறியதாக அந்தச் செய்தியாளர் தெரிவித்தார்.
இருப்பினும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்த வாரம் நியூயோர்க் வரவுள்ள நிலையில், அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியதாகவும் அந்தச் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய மோதலின் போது, பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ட்ரம்ப் பலமுறை தெளிவற்ற அச்சுறுத்தல்களை விடுத்திருந்தாலும், அவற்றை அவர் செயல்படுத்தவில்லை.
முன்னதாக, ஏதேனும் புதிய தாக்குதல் நடத்தப்பட்டால், அது அமெரிக்கத் தளங்கள் மற்றும் நலன்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான பதிலடி நடவடிக்கைகளைத் தூண்டும் என்றும், வொஷிங்டனின் பிராந்திய நட்பு நாடுகள் இந்த மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினராகக் கருதப்படும் என்றும் ஈரானின் இராணுவத் தலைமைத் தலைமையகம் தெரிவித்திருந்தது.
தாக்குதல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்திருந்ததாக ஈரானிய இராணுவம் மேலும் தெரிவித்தது; ஆனால், அந்தத் தகவல் குறித்த கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.
ரியாத்தை குறிவைக்கும் ஹவுத்திகள்
எச்சரிக்கையின்றி அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரினால், வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஏற்கனவே கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
இப்போர் அவர்களின் நகரங்களை ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாக்கியதுடன், முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பாதை முடக்கப்பட்டதால் அவர்களின் பொருளாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமையன்று அவர்களின் இக்கட்டான நிலை மேலும் மோசமடைந்தது; யேமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரில் இம்மாதத் தொடக்கத்தில் திடீர் இராணுவ வெற்றிகளைப் பெற்றிருந்த, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் தலைநகர் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர்.
இரவில் பலத்த சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, ரியாத்தின் முக்கிய சர்வதேச விமான நிலையப் பகுதியிலிருந்து கரும்புகை பெருமளவில் வெளியேறுவதை தாக்குதல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்டியது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்தது.
மத்திய கிழக்கில் எதிர்பாராத விதமாக பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அந்தத் துறை, அமெரிக்கர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், விமான இரத்துகள் மற்றும் வான்வெளி மூடல்கள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்திருக்குமாறும் அறிவுறுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து சவுதி அரேபியா கருத்து தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஹவுத்திகளுக்கு எதிராகப் போராடும் சவுதி தலைமையிலான கூட்டணி, இராச்சியத்தின் மீதான பிற தாக்குதல்களை முறியடித்ததாகக் கூறியது.
ஹவுத்திகளின் அண்மைய பதற்ற அதிகரிப்பு, ரியாத்தை ஒரு வேதனையான இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
மேலும் யேமன் பிரதேசங்களைக் கைப்பற்றுவதைத் தடுக்க அந்தக் குழுவின் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்வதா அல்லது முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தவிர்க்கும் நம்பிக்கையில் பின்வாங்குவதா? என்ற கேள்வியையைும் எழுப்பியுள்ளது.
முடக்கப்பட்ட ஆற்றல் ஏற்றுமதி
கடற்கரையோரம் ஹவுத்திகள் பெற்ற வெற்றிகளின் காரணமாக, அவர்களின் படைகள் இப்போது பாப் அல்-மண்டேப் நீரிணையில் நிலை கொண்டுள்ளன.
இது செங்கடலுக்கும் ஆசியாவுக்கும் இடையே பயணிக்கும் கப்பல் போக்குவரத்தின் மீது அவர்களுக்கு எளிதான கட்டுப்பாட்டையும், அந்த முக்கிய நீர்வழியை முற்றுகையிடும் திறனையும் அளிக்கிறது.
ஈரான் ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையில் பெரும்பாலான கப்பல் போக்குவரத்தை முற்றுகையிட்டுள்ளதால், எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடாவின் எரிசக்தி ஏற்றுமதிகள் இப்போது உலகளாவிய சந்தைகளிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது எண்ணெய் விலைகள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது.
இதற்கிடையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையானது, ஈரான் தனது சொந்த எண்ணெயை விற்பனை செய்வதைத் தடுத்து, இஸ்லாமியக் குடியரசின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, ஜூன் மாதத்தில் எட்டப்பட்டு பின்னர் விதிமுறைகள் குறித்த கருத்து வேறுபாடுகளால் ஜூலை மாதத்தில் முறிந்துபோன தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
ஜூன் மாத ஒப்பந்தத்தின் விதிமுறைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்போவதில்லை என்று ஈரான் ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் வலியுறுத்தியது.
தங்கள் எதிரிகளை முறியடிக்கவும், இராஜதந்திர முயற்சிகள் மூலம் பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஈரான் தொடர்ந்து போராடவும் அதேவேளையில் பேச்சுவார்த்தை நடத்தவும் வேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் தெரிவித்தார்.














