இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, தங்கத் தொகையொன்றைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 17ஆம் திகதி, இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் தலைமன்னார் – பேசாலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடல் வழியாக தங்கத்தை கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு சந்தேகநபர்களுடன், அவர்கள் பயன்படுத்திய டிங்கி ரகப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குறித்த தங்கத் தொகையை கடல் வழியாக தென்னிந்தியாவுக்குக் கடத்த முயன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை கடற்படையினர் வெளியிடவுள்ளனர்.













