இலங்கை கடற்படையினால்,தேவேந்திரமுனைக்கு தெற்கே அமைந்துள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கொடியற்ற வெளிநாட்டுப் படகொன்றுடன் ஏழு (07) வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வெளிநாட்டுப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக நேற்று (27) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் படகில் காணப்பட்ட போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று (03) பொதிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் சுமார் மூன்று (03) கிலோகிராம் 670 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஏழு (07) வெளிநாட்டுச் சந்தேகநபர்கள், வெளிநாட்டுப் படகு (01) மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.




இந்த நடவடிக்கை தொடர்பான ஊடக விழிப்புணர்வுக் கலந்துரையாடல், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன மற்றும் பிரதி பணிப்பாளர் (கடற்படை சட்ட சேவைகள்) கொமாண்டர் சதுரிகா ஜயமினி ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று (27) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடல்சார் வலயம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை கடற்படையினால் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கொடியற்ற வெளிநாட்டுப் படகொன்றுடன் ஏழு (07) வெளிநாட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய பல்தேசிய கடல்சார் கூட்டணியான ஒருங்கிணைந்த கடல்சார் படைகளில் இலங்கை கடற்படை 2023 ஆம் ஆண்டு உறுப்புரிமையைப் பெற்றமை, கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் ஊடாக நிகழ்நேரத்தில் துல்லியமான தகவல்களைப் பயன்படுத்தி கடல்சார் வலயம் தொடர்பில் அனைத்து கடல்சார் தரப்பினரினதும் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பெறப்படும் தரவுகளை ஒருங்கிணைத்தல், இலங்கை விமானப்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் கூட்டுக் கண்காணிப்பு விமான நடவடிக்கைகள் மூலம் கடற்பரப்பைக் கண்காணிக்கும் எல்லையை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய சட்டங்கள், ஒழுங்குவிதிகளை இயற்றுதல் ஆகிய காரணங்களினாலேயே சர்வதேச கடற்பரப்பில் இந்நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க கடற்படையினால் முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலானது தேசியப் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி, இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் மீது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையானது கடலோரப் காவல்படை திணைக்களம், ஏனைய படைகள், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றுடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் தரைப் பிரதேசங்கள் மற்றும் கடல்சார் வலயங்கள் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையினால் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 116 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாகவும், நாட்டிற்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதற்கு எவ்வித இடமும் அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ளுமாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களை வலியுறுத்தினார்.
போதைப்பொருள் ஒழிப்பிற்காகப் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் இயற்றப்பட்டு, இலங்கை கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் சென்று வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கடற்படையினால் முடிந்துள்ளதாகவும், இந்நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் பங்களிப்புச் செய்த இலங்கை கடற்படையினருக்கு, கௌரவ ஜனாதிபதி அவர்களின் சார்பிலும் ஒட்டுமொத்த பொதுமக்கள் சார்பிலும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உதவும் வகையில், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, நவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் கண்காணிப்பு முறைமைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம், சர்வதேச கடற்பரப்பில் கொடியற்ற படகொன்றுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரைக் கைது செய்தமை, இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட தனித்துவமான விசேட நடவடிக்கையின் வெற்றிகரமான பெறுபேறாகவும், வெளிநாட்டுச் சந்தேகநபர்களைக் கைது செய்ததன் மூலம், எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான இந்நடவடிக்கைக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களின் கீழ் உரிய சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், போதைப்பொருட்களைக் கைப்பற்றுவது தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் உரிய முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளமையினால், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கடற்படையினால் இயலுமை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்நடவடிக்கை உட்பட 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு (04) வெளிநாட்டுப் படகுகள் உட்பட மொத்தம் அறுபத்தாறு (66) படகுகளும், பதினெட்டு (18) வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட மொத்தம் முந்நூற்று எழுபத்தொன்பது (379) நபர்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.














