சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் மேலும் 115 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் பரலது நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் என்ற மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 01:30 மணியளவில் (GMT 00:30) இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள் விபத்துக்கான உறுதியான காரணத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
ஆனால், இது திட்டவட்டமான தாக்குதல் அல்ல என்பதை உறுதிபடுத்தினர்.
விபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை அதிகாரி பிரடெரிக் கிஸ்லர் கூறினார்.
இதனால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விரைவாக அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும்.
தீ விபத்தின் பின்னர் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான வாலாய்ஸ் பகுதிக்கு 13 ஹெலிகொப்டர்கள், 42 அம்பியூலன்ஸ்கள் மற்றும் 150 அவசரகால உதவியாளர்கள் இரவு முழுவதும் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அழகிய சுவிஸ் ஆல்ப்ஸின் மையத்தில் அமைந்துள்ள கிரான்ஸ்-மொன்டானா, மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும்,
மேலும் பனிச்சறுக்கு மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளுக்காக உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுவிஸ் தலைநகரான பெர்னில் இருந்து சுமார் இரண்டு மணிநேரம் தொலைவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














