நுவரெலியா, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பிரதேசத்தில் உள்ள லயன் குடியிருப்புகளில், அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் மற்றும் வெடிப்புகள் காணப்பட்டதன் காரணமாக குறித்த வீடுகளில் வசித்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் தற்காலிகமாக கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சீரான காலநிலை நிலவி வருவதால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன (NBRO) அதிகாரிகளால் அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் பின்னர், கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பாரியளவிலான மண்சரிவு அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாளை (05) பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் இன்று (04) அங்கிருந்து வெளியேறி தமது இருப்பிடங்களுக்கு சென்றனர்.

















