விசேட தேவையுடையோரை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி, அவர்களை ஆபாசமான நிலைகளில் தவறாக சித்தரிக்கும் பல கணக்குகள் மெட்டாவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய போலிப் பதிவுகள் விசேட தேவையுடையோரை ஒரு ‘போகப் பொருளாக’ (Fetishizing) மாற்றுவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேவேளை, இத்தகைய போலி கணக்குகள் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளன.
இது போன்ற கணக்குகள் விசேட தேவையுடையோரின் கண்ணியத்தைச் சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசேட தேவையுடையோரின் அடையாளத்தை ஏளனம் செய்வதும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் மிகவும் கொடூரமானது” எனவும் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் ‘டிசப்பிலிட்டி ரைட்ஸ் யூகே’ (Disability Rights UK) அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி விமர்சித்துள்ளது.
மேலும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் AI கருவிகளின் தரவுத் தொகுப்புகளில் (Datasets) உள்ள பாரபட்சமான தன்மையே இத்தகைய பாலியல் ரீதியான போலிப் படங்களை உருவாக்குவதற்குக் காரணம் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவற்றை எளிதில் மீறி இத்தகைய உள்ளடக்கங்களை உருவாக்க முடிவது பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) படி, விசேட தேவையுடையோரை இழிவுபடுத்தும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாடு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், விசேட தேவையுடையோரைத் தாக்கும் அல்லது பாலியல் சுரண்டலை ஊக்குவிக்கும் பதிவுகளைத் தாங்கள் நீக்கி வருவதாகவும், இது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் உறுதி அளித்துள்ளது.














