பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் இருந்தபோது இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொ*ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, மதுஷ் கொ*ல்லப்பட்ட நாளன்று அவரை மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகளிடம் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக CID தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, மாளிகாவத்தை பகுதியில் வைத்து மாகந்துரே மதுஷ் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொ*ல்லப்பட்டார். மதுஷ் வழங்கிய தகவலுக்கமைய போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
குறித்த படுகொ*லை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு மாகந்துரே மதுஷின் சகோதரர் ஒருவர் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை அடுத்து, பொலிஸ் மா அதிபரினால் இந்த விவகாரம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டது.
இவ்விசாரணைகள் குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் பெறுவதற்கும், ஊடக நிறுவனங்களிடமிருந்து குறித்த படுகொ*லை தொடர்பான காணொளிக் காட்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.













