உலகளவில் போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். யாழ். மாவட்டத்தின் தீவுப் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறியுள்ளமையால் அப்பிரதேசங்கள் சோபையிழந்து காணப்படுகின்றன.
நாம் தற்போது உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்வதால் அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களில் வந்து குடியமரலாம்.
மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே ‘கியூ.ஆர்’ முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் – என்றார்.













