போரால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை வழியாக இரண்டு இந்தியக் கொடியுடன் கூடிய எரிவாயு கப்பல்களை ஈரான் அனுமதித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஈடுபாடு “பலன்களைக் கொடுத்துள்ளது” என்பதைக் வெளிக்காட்டுகின்றது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில், உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில் எஸ். ஜெய்சங்கரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சனிக்கிழமையன்று (15) சுமார் 92,712 மெட்ரிக் தொன் திரவப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயுவை (LPG) சுமந்து சென்ற சிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு எரிவாயு கப்பல்கள் இந்தியாவுக்குச் செல்லும் வழியில் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தன.
இந்த நிலையில், தி பைனான்சியல் டைம்ஸுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் இந்திய வெளிவிகார அமைச்சர், கப்பல்களின் பாதுகாப்பான பாதை இராஜதந்திர ஈடுபாட்டின் நன்மைகளை விளக்குகிறது என்று கூறினார்.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதிலிருந்து, ஜெய்சங்கர் தனது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நான்கு முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்த நீரிணை, ஒவ்வொரு நாளும் உலகளாவிய எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு அதன் வழியாக செல்கிறது.
பாரசீக வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரே கடல்வழிப் பாதையாகும்.














