இலங்கையில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற கோரமான வீதி விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இவ்விபத்துகளில் பெரும்பாலானவை சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
பண்டிகைக் காலங்களில் இவ்வாறான பொறுப்பற்ற செயல்கள் பல குடும்பங்களைப் பாதிப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வீதிகளில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், ஆபத்தான முறையிலும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு காலப்பகுதியில் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பொலிஸார் விசேட சோதனைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு சாரதிகளுக்குக் விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.












