அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதிகள் எதுவும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு இன்று (16) தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு வாரங்களாகப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் விவாதித்து வரும் விடயங்களில் அணுசக்தி விவகாரங்களும் அடங்கும் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத், கடந்த வார இறுதியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க மற்றும் ஈரான் தரப்புப் பேச்சுவார்த்தையாளர்களை வரவேற்றது.
எனினும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, நீண்ட நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் அவர்களால் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை.
ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையிலும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும், நீண்ட கால அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் நெருக்கமாக உள்ளனர் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை அன்று, ஈரானுடனான மேலதிகப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியது.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தற்சமயம் கூறியுள்ளது.













