ஆசியாவில் ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக முன்னர் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு எண்ணெய் கப்பலில் தங்கள் படைகள் ஏறியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செவ்வாயன்று (21) தெரிவித்தது.
பென்டகனின் சமூக ஊடகப் பதிவு ஒன்றின்படி,
அமெரிக்கப் படைகள் சோதனையிடுவதற்கான உரிமையின் பேரில் கடல்வழித் தடையை மேற்கொண்டு, M/T Tifani என்ற கப்பலில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஏறியுள்ளன.
அந்தக் கப்பலில் போட்ஸ்வானாவின் கொடியுடன் பறந்தபோதிலும் அக்கப்பலை நாடற்றது என்று பென்டகன் குறிப்பிட்டது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த முற்றுகை, ஈரானியக் கொடி ஏந்திய அனைத்துக் கப்பல்கள் மற்றும் அந்நாட்டிற்குப் பொருள்சார் ஆதரவை வழங்கும் எந்தவொரு கப்பலுக்கும் நீட்டிக்கப்பட்டது.
அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தெஹ்ரானுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலையும் அல்லது அதன் அரசாங்கத்திற்கு உதவக்கூடிய ஆயுதங்கள், எண்ணெய், உலோகங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களையும் தடுப்பதற்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்கனவே பலவீனமாக உள்ள போர் நிறுத்தம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரும், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வரும் வேளையிலும் பென்டகனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, M/T Tifani என்ற கப்பல் செவ்வாயன்று இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே எண்ணெயை ஏற்றிச் சென்றபோது இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.















