தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்டகாலக் கூட்டணி உறவுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தற்போது முறிவடைந்துள்ளது.
அத்துடன், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ (த.வெ.க.) வழங்கப்போவதாக காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க.வை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதரவுக் கடிதத்தில் 5 எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்குவது குறித்து காங்கிரஸ் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது:
அதன்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் மதவாத சக்திகளைத் த.வெ.க. தனது கூட்டணியில் அனுமதிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த புதிய கூட்டணியானது எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என காங்கிரஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் இந்த முடிவுக்கு தி.மு.க. தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திராவிடக் கட்சிகளின் நீண்டகால அரசியல் ஆதிக்கத்தில், காங்கிரஸின் இந்த நகர்வு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய அரசியல் கூட்டினால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உறுதியாகியுள்ளதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.













