லாவோஸ் நாட்டின் மத்திய ஷைசோம்போன் (Xaisomboun) மாகாணத்தில் உள்ள ஆபத்தான நிலத்தடி குகையொன்றில், சுமார் 10 நாட்களாக வெளிஉலகத் தொடர்பின்றிச் சிக்கியிருந்த 7 பேரில் நால்வரை லாவோஸ் மற்றும் தாய்லாந்து நாட்டு மீட்புக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக உயிருடன் மீட்டுள்ளனர்.
தங்கம் தேடுவதற்காகச் சென்ற கிராம மக்கள், இயற்கைச் சீற்றம் காரணமாகக் குகைக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே இந்த விசேட கூட்டு மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஷைசோம்போன் மாகாணத்தைச் சேர்ந்த 7 கிராம மக்கள் அடங்கிய குழுவினர், கடந்த மே மாதம் 20ஆம் திகதி தங்கம் தேடும் நோக்கில் இந்த நிலத்தடி குகைக்குள் இறங்கியுள்ளனர்.
அவர்கள் குகையின் உட்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், அப்பகுதியில் திடீரெனக் கடுமையான கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாகக் குகையின் உட்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, அவர்கள் உள்ளே நுழைந்த பிரதான நுழைவாயில் முற்றிலும் பாறைகளாலும் மண்ணாலும் மூடப்பட்டது.
குகையின் நுழைவாயில் மூடப்பட்டதால் 7 பேரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
எனினும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களில் ஒருவர் மாத்திரம் அதிர்ஷ்டவசமாக எப்படியோ குகையிலிருந்து தப்பித்து வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்த நபர், குகைக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மற்றைய 6 நபர்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு லாவோஸ் இராணுவத்தினருடன், குகை மீட்புப் பணிகளில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து நாட்டு மீட்புக் குழுவினரும் அவசரமாக வரவழைக்கப்பட்டனர்.
இரு நாட்டு கூட்டு மீட்புப் படையினரின் 10 நாள் தொடர் போராட்டத்தின் பலனாக, தற்போது நால்வர் பத்திரமாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குகைக்குள் இன்னும் சிக்கியுள்ள எஞ்சிய நபர்களை மீட்பதற்கான அதிநவீன உபகரணங்களுடனான விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்போதும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














