வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவுக்கும் இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, ‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை எனவும் இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் நிலையில் உள்ளது எனவும் விரைவில் அந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, முதன்முதலாக இந்த ஏவுகணையைப் பெற்ற வெளிநாடு என்ற பெருமையைப்பெற்றது. இந்த நிலையில் தற்போது வியட்நாமைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் இந்த வரிசையில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.















