ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் லண்டன் சுரங்கப்பாதை ரயில் சாரதிகள் இன்று (04) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தலைநகரில் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இதேபோன்ற வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க (RMT) உறுப்பினர்களின் 24 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது.
ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்கும் (RMT) லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனத்திற்கும் (TfL) இடையே திங்களன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், வேலை நேரம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறின.
இதனால், தொழிற்சங்க உறுப்பினர்கள் செவ்வாயன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பயணக் குழப்பங்களைத் தடுப்பதற்காக, இன்று திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு லண்டன் மேயர் சர் சாதிக் (Sir Sadiq ) தொழிற்சங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒரு நாள் சம்பளத்தை இழப்பதாகவும், லண்டன் போக்குவரத்து நிறுவனம் வருவாயை இழப்பதாகவும், வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழப்பதாகவும், நோயாளர்கள் பெருமளவு சிரமத்துக்கு உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
புதிய நான்கு நாள் வேலை வாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்வினையாக இந்த வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், ரயில் சாரதிகள் சங்கங்களில் ஒன்றான அஸ்லெஃப் (Aslef) இந்த புதிய சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
















