நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, 4 மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இந்த அறிவித்தலின்படி, குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வட மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இக்காற்று நிலைமை பலமாகத் தாக்கம் செலுத்தும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவான பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பலத்த காற்று வீசும் வேளைகளில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.













