லண்டனில் நிலவி வரும் மோசமான காலநிலை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக, முதன்மை விமான நிலையங்களான ஹீத்ரோ (Heathrow) மற்றும் கேட்விக் (Gatwick) ஆகியவற்றின் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இரு விமான நிலையங்களிலும் 900க்கும் மேற்பட்ட உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்கள் சுமார் 11 மணித்தியாலங்கள் வரை தாமதமடைந்துள்ளதுடன், பல விமானங்கள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சீர்குலைவு இன்றும் நீடிக்கலாம் எனப் பிரித்தானிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுச் சேவையான ‘நாட்ஸ்’ (NATS) எச்சரித்துள்ளது.
இந்த திடீர் வான் போக்குவரத்து சீர்குலைவு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது வீடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, தங்களின் விமானச் சேவையின் தற்போதைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.














