வங்கிகள் மூலம் பணம் கொடுத்து வாங்குகிறவர்கள் தங்களுக்குரிய வரி செலுத்துனர் அடையாள இலக்கமாகிய TIN நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதையும் இந்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அலுவலகத்திற்கு முன்பாக யாழ்ப்பாணத்தவர்கள் வரிசையில் நின்றார்கள்.
வரிசையில் நிற்பது ஈழத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியா? போருக்கு முன் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் கூப்பன் கடைக்கும் முன் வரிசையில் நின்றார்கள். பாணுக்கு க்யூ ;சீனிக்கு கியூ.இப்படி எல்லாவற்றுக்கும் க்யூ.
அதன்பின் போர்க்காலங்களில் நிவாரணத்துக்காக வரிசையில் நின்றார்கள். சோதனைச் சாவடிகளை,போர் எல்லைக் கோடுகளைக் கடப்பதற்கு வரிசையில் நின்றார்கள்.முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன் வரிசையில் நின்றார்கள்.இறுதிக் கட்டப் போரில் சரணடைவதற்காக வரிசையில்,நிர்வாணமாக நின்றார்கள்.கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களும் வரிசையில்தான் சென்றிருப்பார்களோ?
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் வரிசை முடியவில்லை. நலன்புரி நிலையங்களில் பதிவதற்காக,நிவாரணம் பெறுவதற்காக வரிசையில் நின்றார்கள்.மீளக் குடியேறுவதற்கும் வரிசை. பெருந்தொற்று நோய்க்காலத்தில் ஆளுடன் ஆள் முட்டாமல், இடைவெளி விட்டு வரிசையில் நின்றார்கள்.பின்னர் பொருளாதார நெருக்கடியின்போது எரிபொருளுக்காக,சமையல் எரி வாய்வுக்காக வரிசையில் நின்றார்கள்.பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பி நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக பாஸ்போர்ட் பெறுவதற்காக, வவுனியாவில், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு முன் இரவிலேயே போய் கியூவில் நித்திரை கொண்டார்கள்.
இப்பொழுதும் உலகில் எந்த ஒரு பாகத்திலாவது யுத்தம் வெடித்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் வரிசையில் நிற்கிறார்கள்.அது கூடப் பரவாயில்லை,”நோ லிமிட்” கடை திறக்கப்பட்டபோது அங்கேயும் வரிசையில் நின்றார்கள்.இப்பொழுது பின் நம்பரைப் பெறுவதற்காக வரிசை.
இவ்வளவு வரிசைகளையும் ஏன் கூற வேண்டி வருகிறது என்றால்,அந்த வரிசையைக் காட்டி தமிழ் மக்களை குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களை நக்கல் அடிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இந்த வரிசைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வருந்தான்.ஆனால் இந்த வரிசைகளுக்கு பின்னால் ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலில் உண்டு.அந்த உளவியலானது இறந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்,துரோகங்கள்,அவற்றின் விளைவாக ஏற்பட்ட ஏமாற்றங்கள்,இழப்புகள்,ஆபத்துக்கள்,காயங்கள்..போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவது.
கடலால் சூழப்பட்ட குடாநாட்டு மனோநிலையின் விளைவும் அது. எப்பொழுதும் எதிர்பாராதவிதமாகச் சுற்றி வளைக்கப்படலாம்;எந்த நேரத்திலும் வெளி உலகத்துடனான தொடர்பை இழக்கலாம்;அதனால் எப்பொழுதும் சேமிப்பை நம்பி இருக்கவேண்டும்;என்ற ஆயிரமாயிரம் ஆண்டு கால நம்பிக்கைகளின் விளைவு அது.
யுத்த கால அனுபவங்களின் விளைவாக எதையும் முழுமையாக நம்பாத, எல்லாவற்றையும் சந்தேகிக்கின்ற,யாரையும் முழுமையாக நம்பாத ஒரு மனோநிலையின் விளைவு அது.
மட்டுமல்ல,புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பினால் ஏற்பட்ட செல்வச் செழிப்பும் அதற்கு ஒரு காரணம்.அதிகரித்த நிதிப்புழக்கம் காரணமாக வங்கிகளின் ஊடாக அதிகளவு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் ஒரு சமூகம் என்ற அடிப்படையில், தங்களுக்குரிய பின் நம்பரை பெறுவதற்காக யாழ்ப்பாணத்தவர்கள் முண்டியடிப்பது ஒரு சமூக யதார்த்தம்.
போருக்கு முன்னரே யாழ்ப்பாணத்து பொருளாதாரத்தை “போஸ் கார்ட் பொருளாதாரம்”,அல்லது “மணியோடர் பொருளாதாரம்” என்று கூறுவதுண்டு.தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பத்தவர்கள் அனுப்பிய காசில் நின்றுபிடித்த ஒரு சமூகம் என்பதனால் அவ்வாறு வருணிக்கப்பட்டது.புலப்பெயர்ச்சியானது தமிழ்ச் சமூகத்தில் கணிசமானவர்களை வெளியிலிருந்து வரும் காசில் தங்கியிருப்பவர்களாக மாற்றியிருக்கிறது.எனவே அதிகம் வங்கிமூலமான கொடுக்கல் வாங்கல்களைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் அதோடு தொடர்புடைய ஆவணங்களில், அதோடு தொடர்புடைய விடயங்களில்,அதிகம் முன்னெச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பதில் தவறில்லை .
ஆயுத மோதல்களின் போதும் அதன் பின்னரும் வங்கிகளில் சேமித்த பல ஓய்வூதியர்களின் சேமிப்புக்கள் அவர்கள் இறந்தபின் உரிமைகோர வாரிசுகள் இல்லாமல் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இதுதொடர்பான சரியான புள்ளி விவரங்களைப் பெறமுடியவில்ல.அவ்வாறு உரிமை கோரப்படாத தொகை பல கோடிகள் பெறும் என்றும் ஒரு புள்ளி விபரம் வெளிவந்தது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
அப்படித்தான் தமிழ் மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்கும் மற்றொரு பிரதான வழியாக நகைகள் காணப்பட்டன;காணப்படுகின்றன.வரிகளில் இருந்து தப்பவும் நகைகள் உதவும்.இவ்வாறு பல தலைமுறைகள் தோறும் சேகரிக்கப்பட்ட நகைகள் பல கோடி பெறுமதியானவை,இறுதிக் கட்டப் போரில் கைவிடப்பட்டன.அண்மையில் இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டிருந்தார்.மொத்தம் 150 கிலோ எடையுள்ள தங்கம் அவ்வாறு வன்னியில் இருந்து எடுக்கப்பட்டதாக அதற்கு பொறுப்பான அமைச்சர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்தார்.
போரும் புலப்பெயர்ச்சியும் இடப்பெயர்வுகளும் தமிழ் சொத்துக்களை,தமிழ் செல்வத்தைத் தின்றுவிட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் காரணமாக சேமிப்புக்கள் கரைந்து போய்விட்டன.எனினும், எல்லாவற்றையும் இழந்த பின்னரும் தமது சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழத் தேவையான கூட்டு உளவியல் தமிழ் மக்களுக்கு உண்டு.
ஆனால் கொடுமை என்னவென்றால்,தமிழ் மக்களின் இயல்பான ஆற்றலைத் திரட்டி,வழிநடத்தப் பொருத்தமான தலைவர்கள் இல்லை என்பதுதான். நெருக்கடியான காலகட்டங்களிலும்,முடிவெடுப்பதற்குத் தடுமாறுகின்ற தருணங்களிலும் ஒரு மக்கள் கூட்டத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சமூகத் தலைவர்களோ அல்லது மதத் தலைவர்களோ அல்லது கருத்துருவாக்கிகளோ அல்லது ஊடகங்களோதான் அந்தப் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும்.
கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவர் கே.கே.எஸ் வீதியில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு சென்று அந்த அலுவலகத்துக்கு பொறுப்பான ஆணையாளருடன் ரின் நம்பர் தொடர்பாக உரையாடியுள்ளார். அந்த நம்பரைப் பெறுவதற்கான காலக்கெடு தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல என்பதனை ஆணையாளர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த ஊடகவியலாளர் சில ஊடக ஆசிரியர்களுக்கு ஆணையாளருடைய இலக்கத்தை கொடுத்து அவரோடு கதைக்குமாறு கேட்டிருக்கிறார்.ரின் இலக்கம் தொடர்பான உண்மைச் செய்திகள் இப்பொழுது ஊடகங்களில் வரத் தொடங்கியுள்ளன.இதுதொடர்பாக அரச அலுவலர்கள் வாயைத் திறந்ததும் இப்பொழுது கேகேஎஸ் வீதியில் கியூவை காண முடியவில்லை.
அதாவது முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், முடிவெடுத்து மக்களுக்கு வழி காட்டினால்,மக்கள் தேவையில்லாமல் பதட்டமடையவோ குழப்பமடையவோ மாட்டார்கள்.
உலகில் உள்ள பெரும்பாலான எல்லா பேரரசுகளின் கைகளிலும் தமிழ் மக்களின் ரத்தம் உண்டு.எல்லாப் பேரரசுகளாலும் சப்பித்துப்பப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்.இந்தப் பிராந்தியத்திலேயே வேறு எந்த சிறிய மக்கள் கூட்டத்திற்கு இல்லாத கொழுத்த அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. பொருத்தமான தலைவர்கள் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து, தமிழ்மக்களுக்கு வழி காட்டத் தவறிய வெற்றிடத்தில்தான் யாழ்ப்பாணத்தவர்கள் அளவுக்கு மிஞ்சிப் பயப்படுகிறார்கள்; அல்லது அளவுக்கு மிஞ்சி யோசித்து;அளவுக்கு மிஞ்சிய முன்னெச்சரிக்கையோடு;முண்டியடித்துக் கொண்டு போய் வரிசைகளை வளர்க்கிறார்கள்.













