அரச அதிகாரிகளின் தோல்விகள் மற்றும் முறைகேடுகள் மூடிமறைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘ஹில்ஸ்பரோ சட்டம்’ (Hillsborough Law) பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ (House of Commons) மூலம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக ‘பொது அலுவலக சட்டமூலம்’ என்று அழைக்கப்படும் இந்தச் சட்டம், பொதுத்துறை நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும் எந்தவொரு உத்தியோகபூர்வ விசாரணைகளின் போதும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் மற்றும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்பதைச் சட்டரீதியான கடமையாக்குகிறது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறப் பல ஆண்டுகள் போராடிய சமூக ஆர்வலர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் பிரதமர் ஸ்டார்மர் வெகுவாகப் பாராட்டினார்.
கடந்த 1989ஆம் ஆண்டு லிவர்பூல் மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற எஃப்.ஏ கோப்பை (FA Cup) அரையிறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 97 பேர் உயிரிழந்தனர்.
இதன்போது , பொலிஸ் உயர் அதிகாரிகள் தங்களின் தவறுகளை மூடிமறைக்கப் பொய் சாட்சியங்களை உருவாக்கியதுடன், விபத்திற்கு லிவர்பூல் ரசிகர்களின் தவறான நடத்தைதான் காரணம் என அவர்கள் மீது பழியைச் சுமத்தி உண்மைகளை மறைத்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்தே இச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.














