ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய பிரச்சினைகளை சரியான விதத்தில் தாங்கள் பேசுவார்கள் என்றும் ஆனால் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தங்களால் முடியுமா என்று கூற முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். தங்களால் இயன்றவரை எங்களுக்காக வேலை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.
தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூற வேண்டும், இங்கே நடந்தது இனப்படுகொலைதான் என்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், சர்வதேசத்தின் ஊடான நீதி விசாரணை தான் எங்களுக்கு வேண்டும். உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ, OMP அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நாங்கள் எத்தனை ஆணை குழுக்களை சந்தித்துள்ளோம், எத்தனையோ ஆட்சியாளர்களை சந்தித்துள்ளோம் இவை எல்லாவற்றையும் கடந்து தான் நாங்கள் ஒரு சர்வதேச விசாரணையை கோரியுள்ளோம்.
சர்வதேசம மீது உள்ள நம்பிக்கையில் தான் நாங்கள் இற்றைவரை சர்வதேசத்திடம் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
எங்களுடன் இருந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் 450க்கும் மேற்பட்டோர் இற்றைவரை உயிரிழந்து விட்டார்கள்.
அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். கொடூர யுத்தத்தின் பின்னர் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம்தான் விசாரணை செய்ய வேண்டும்.
கொலையாளிகள் ஒருபோதும் எமக்குத் தீர்வினை தர மாட்டார்கள். கொலையாளிகள் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.












