ஜார்கண்டில் அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு கண்டித்து மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜ எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 25ம் திகதி முதல் ராஞ்சியில் நடக்கும் போராட்டம்,இன்று 17வது நாளை எட்டியது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) ஜார்க்கண்ட் சட்டசபை கூடும் நிலையில், மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
அசம்பாவிதங்களைத் தடுக்கக் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பரீட்சை முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜ தலைவர்களை பொலிஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.









