சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ரியாத்துக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ரீதியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய விமான நிறுவனம் தெரிவித்தது.
“எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்” என்று கூறிய விமான நிறுவனம், வணிக ரீதியான விமானச் செயல்பாடுகளுக்குச் சூழல் ஏற்றதாக மதிப்பிடப்பட்டவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தது.
சேவை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், கூடுதல் தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அல்லது தங்கள் பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ரியாத் விமான நிலையத்தின் மீதான தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக சவுதி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அமெரிக்க-ஈரான் மோதலால் தூண்டப்பட்ட போர் தீவிரமடைந்து வரும் நிலையில், யேமனின் ஹவுத்தி குழு சவுதி அரேபியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, அதன் வான்வெளியை முடக்க முயன்று வருகிறது.
மேலும் பலரைக் காயப்படுத்திய, சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றைச் சேதப்படுத்திய மற்றும் விமான நிலையத்தின் மீது புகை மண்டலத்தை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல்களால், உலக எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களின் முக்கியக் கூட்டம் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பல விமான நிறுவனங்கள் சவூதி தலைநகருக்கான விமானச் சேவைகளை இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.














