இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து, தலைநகரில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் இன்று (10) 35,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் துணை இராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில், சீருடையில் பொருத்தப்பட்ட உடல் கேமராக்கள், பல அடுக்கு தடுப்புகள், விசேட அதிரடிப் படை மற்றும் பெண்கள் மட்டுமே அடங்கிய ‘பிங்க் ஃபோர்ஸ்’ (Pink Force) பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுப் போக்குவரத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
போராட்டத்தின் முக்கிய இடமான மத்திய டெல்லியில் உள்ள குறிப்பிட்ட சில நிலையங்களில், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடியுள்ளது.
போராட்டத்தின் காரணமாக, நேற்றிரவு 9 மணி முதல் 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுமாறு டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டது.
இந்தக்கட்டுப்பாடுகள் இன்று வரையிலும், தேவைப்பட்டால் அதற்குப் பின்னரும் தொடரக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் உயிர்நாடியாகக் கருதப்படும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணிக்குள் புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களை வந்தடையவிருந்த மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் தங்கள் புறப்படும் நிலையங்களிலிருந்து கிளம்பி, அதே கால இடைவெளியில் இந்த நிலையங்களை வந்தடையவிருந்த ரயில்களும் அவை புறப்பட்ட இடத்திலேயே இரத்து செய்யப்பட்டன.
திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கும் இந்த இரத்து நடவடிக்கைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.














