எண்ணெய் விலையை உயர்வாக வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தவும் முயன்று வரும் ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைக் குறிவைக்கப் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகளை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியதிலிருந்து, ஹார்முஸ் நீரிணை மீது கட்டுப்பாட்டைச் செலுத்த தெஹ்ரான் முயன்று வருகிறது.
வொஷிங்டனுக்கு எதிராகச் சாதகமான நிலையை அடைவதற்காக, போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைத் தாங்கிச் சென்ற இந்த நீர்வழிப்பாதையின் போக்குவரத்தை அது கட்டுப்படுத்தியுள்ளது.
அதன் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அந்த நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை வெகுவாகக் குறைத்து, மசகு எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
அந்த இரண்டு அதிகாரிகளும் புதிய உத்தி குறித்த விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும், தங்கள் கட்டுப்பாடுகளை மீறுவதாகக் கருதும் கப்பல்களுக்கு எதிராக ஈரான் சுமார் 10 நாட்களுக்கு முன்பு வெவ்வேறு தாக்குதல் உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும், இதனால் அத்தகைய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்கத் தேர்தலின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு, தாக்குதல்களின் வகையிலும் வேகத்திலும் மாற்றங்களைச் செய்வது அந்த உத்தியில் அடங்கியிருந்ததாக அவர்கள் கூறினர்.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதற்கான அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் முயற்சிகளை முறியடிப்பதே இதன் நோக்கமாகும் என்று அந்த இரு அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் புதிய உத்தியைக் கையாள்வதற்கான முடிவு ஈரானின் உயர்மட்டத் தலைமையால் எடுக்கப்பட்டது என்றும், நாட்டின் ஆளும் கட்டமைப்பு முழுவதும் அது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.














