கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை (17) மாலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்தார்.
இது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி, ‘உண்மை கண்டறியும் குழு’ ஒன்றை அமைக்குமாறு கோரப்போவதாகவும் அவர் கூறினார்.
கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள துர்கா பூஜை நடைபெறும் பிரபலமான இடமான ‘சோர் பகான்’ (Chor Bagan) பகுதியில், திருவிழாவின் ஏழாம் நாளான ‘சப்தமி’ அன்று, குறுகிய சந்தொன்றின் வழியாக மக்கள் கூட்டமாகச் சென்றபோது நெரிசல் ஏற்பட்டது.
பலத்த மழையினால் வீதிகள் வழுவழுப்பாக மாறியிருந்த வேளையில் கூட்டத்தின் அழுத்தத்தினால் பந்தலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, கோர்பகன் துர்கா பூஜையின் அமைப்பாளர்கள் உட்பட 12 பேரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, சோர் பகான் துர்கா பூஜை நிர்வாகத்தின் பொதுச் செயலாளர் ஜெயந்த பானர்ஜி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நிர்வாகத்தின் ஏனைய அனைத்து நிர்வாகிகளும் தாங்கள் இராஜினாமா செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துயர சம்பவத்தின் எதிரொலியாக இன்று (18) நடைபெறவிருந்த மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அமைச்சர் உமேஷ் ராய் தெரிவித்தார்.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவிருந்த திட்டமிடப்பட்ட கூட்டமும் அடங்கும்.














