இந்தியா-நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செவ்வாய்க்கிழமை (20) முதல் நடைமுறைக்கு வந்தது.
இது இந்தியாவின் 17-வது செயல்பாட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் மற்றும் திறன்மிக்க பணியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளதாக குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நியூசிலாந்து அனைத்து இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளையும் நீக்கும்.
இது ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், தரைவிரிப்புகள், பீங்கான் பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகளுக்குப் பயனளிக்கும்.
மேலும், இந்த ஒப்பந்தம் நியூசிலாந்தின் சேவைச் சந்தையில் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்குப் புதிய இடப்பெயர்வு வழிகளையும் உருவாக்குகிறது.
2026 ஏப்ரல் 27 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2010-ல் தொடங்கி, 2015-ல் முடங்கி, பின்னர் 2025 மார்ச் மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகும்.
சேவைகள் துறையைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, நிதிச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட 118 துறைகளில் நியூசிலாந்து தனது உறுதிப்பாடுகளை வழங்கியுள்ளது.
அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் இருதரப்பு சரக்கு வர்த்தகம் சுமார் 1.23 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில் இந்தியாவின் ஏற்றுமதி 651.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 575.9 மில்லியன் அமெரிக்க டொலலர்களாகவும் இருந்தன.
இந்த ஒப்பந்தம், நியூசிலாந்திலிருந்து 15 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈட்டும் இலக்கையும் நிர்ணயித்துள்ளது.
இருப்பினும், கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நியூசிலாந்தின் மொத்த முதலீடு 1 பில்லியன் அமெரிக்க டொலலருக்கும் குறைவாகவே இருந்ததைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இலக்கு வெறும் விருப்பமாகவே உள்ளது என்று GTRI குறிப்பிட்டுள்ளது.

















