இலங்கை கடற்படையின் வடமேற்கு கடற்படைக் கட்டளையினால் நேற்று (17) இரவு புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, சட்டவிரோத தங்கக் கடத்தல் நடவடிக்கை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது இரண்டு (02) சந்தேக நபர்களுடன் மூன்று (03) கிலோகிரா மிற்கும் அதிகமான தங்கத் தொகை மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்தத் தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்காலத்தில் வெளியிட இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளது.
முன்னதாக இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் தலைமன்னார் – பேசாலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது தங்கக் கடத்தல் நடவடிக்கை ஒன்றும் முறியடிக்கப்பட்டது.
இதன்போது, கடல் வழியாக தங்கத்தை கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு சந்தேகநபர்களுடன், அவர்கள் பயன்படுத்திய டிங்கி ரகப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குறித்த தங்கத் தொகையை கடல் வழியாக தென்னிந்தியாவுக்குக் கடத்த முயன்றிருக்கலாம் எனவும் கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.













