கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2026 நவம்பர் 20 ஆம் திகதி, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரேமண்ட் மலர் மண்டபத்திற்கு அருகிலுள்ள மயான சுற்றுவட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதசாரிகள் கடவையில் பச்சை விளக்கு ஒளிர்ந்திருந்த நிலையில், இருவர் வீதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ராஜகிரிய திசையிலிருந்து வந்த ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் வாகனம் அவர்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, ஜீப் வாகனத்தின் சாரதி ஒலிப்பானை ஒலித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாலபே பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் முறைப்பாட்டாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபரும் அவரது மனைவியும் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 37 வயதுடைய சந்தேகநபர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் செலுத்திய ஜீப் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (22) அலுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












