அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசுபிக் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியுசிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் அந்நாடுகளைச் சுற்றியுள்ள குட்டித் தீவுகளை இந்த பயங்கர நிலநடுக்கம் அதிர வைத்துள்ளது.
பிஜி, நியுசிலாந்து உள்ளிட்ட கடல் பகுதிகளில் அலைகள் அதிக அளவில் இருந்ததாகவும் சுமார் மூன்றரை அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பூகம்பத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உருவாக வாய்ப்புள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறிருப்பினும் கடலுக்கு அடியில் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் நிலப்பரப்பில் பாரிய சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.