அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.
கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய மர்பநபர் குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியாகவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் இந்தச் சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என வொஷிங்டன் பெருநகர பொலிஸ் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ தெரிவித்தார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கெபிடல் கட்டடம் முடக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், கட்டடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.