அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் ஈஸ்டர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட முடியாத நிலையில் புதிய கட்டுப்பாடுகளின் கீழ் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் மூன்றாவது முடக்கக் கட்டுப்பாடுகள் இன்று அமுலாகியுள்ளளது.
இதனிடையே முடக்கம் அமுலுக்கு வரும் முன்னர், தலைநகர் பரிஸில் இருந்து பெருமளவில் மக்கள் வெளியேறியுள்ளனர்.
பிரான்சில் தினசரி புதிய நோய்த் தொற்றுகள் பெப்ரவரி முதல் இரு மடங்காகக் பெருகி 40ஆயிரமாக அதிகரித்துள்ளன.
அத்துடன், பிரான்ஸில் 4.8 மில்லியன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவிலும், உலகளவிலும் கொரோனா பாதிப்பில் அந்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும், 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையில் உலகளவில் எட்டாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.