உலகின் பின்தங்கிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், லிபியா 57,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்களது கொரோனா தடுப்பூசிகள் லிபியாவை வியாழக்கிழமை வந்தடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு சுகாதார முன்களப் பணியாளர்கள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட லிபியாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 166,888பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2,807பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி சர்வதேச விநியோகத்தை வழங்கியதிலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றடைந்துள்ளது.
இதுவரை, உற்பத்தியாளர்களான அஸ்ட்ராசெனெகா, ஃபைசர்- பயோஎன்டெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகியவற்றிலிருந்து 38 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.