இரத்த உறைதல் புகாரின் எதிரொலியாக அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா தடுப்பூசியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
பைசர், மாடர்னா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டிற்கு வந்தன. ஆயினும், ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என்ற தன்மையுடைய ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களின் சிலருக்கு இரத்த உறைதல் பிரச்சனை கண்டறியப்பட்டது.
இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசிப் பயன்பாட்டினை நிறுத்தி வைத்த அமெரிக்க அரசு, மருந்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த எப்டிஏ, சிடிசிபி ஆகிய அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக அதனை ஆய்வு செய்த சிடிசிபி எனப்படும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியை அமெரிக்காவில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தடுப்பூசிப் பயன்பாட்டை மீண்டும் தொடங்க அமெரிக்க அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.