தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடந்த 20-ஆம் திகதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுபான விற்பனை நிலையங்கள், பெரிய அரங்குகள் கூட்ட அரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
வணிக வளாகங்களை திறக்க அனுமதி இல்லாததால், சென்னையிலுள்ள அனைத்து அங்காடிகளும் பூட்டப்பட்டுள்ளன.
இதேநேரம், புதுச்சேரி தவிர்த்து ஏனைய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ – பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கும் இ -பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிகைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.