மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது.
இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் மொத்தம், 805பேர் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகள் உதவி சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த தினங்களில் சின் மாநிலத்தில் உள்ள மைண்டாட் டவுன்ஷிப், யாங்கோன் பிராந்தியத்தில் உள்ள தெற்கு டகன் டவுன்ஷிப் மற்றும் பாகோ பிராந்தியத்தில் உள்ள டைக்-யு டவுன்ஷிப் ஆகியவற்றிலிருந்து மூவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் 4,146 பேரை தடுத்து வைத்துள்ளது. அவர்களில் 92பேர் குற்றவாளிகள் என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
மே 18ஆம் திகதி நிலவரப்படி, 1722 பேருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 20 பேருக்கு மரண தண்டனை மற்றும் 14 முதல் மூன்று ஆண்டுகள் கடின உழைப்புடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மியன்மார இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.