அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
51 விகிதமானவர்களுக்கு தடுப்பூசி நோயினை தடுத்தது என்றும் கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலையில் சேர்வதை 100 சதவீதம் தடுத்துள்ளது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
சினோபோர்மிற்குப் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது சீன தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவைப் போலவே, சிலி, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தடுப்பூசி, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கும் அதேவேளை இரண்டாவது டோஸ் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பின்னர் போடலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேசிலில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனாவினால் பதிவாகும் இறப்பு எண்ணிக்கையில் 95% வீழ்ச்சியை காட்டியது என்றும் முதியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவக்ஸ் திட்டத்திற்காக ஏற்கனவே 10 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் டோஸை தயாரிக்கவுள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.