மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
சென்.லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 75 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் வோல்ஷ் 3 விக்கெட்டுகளையும் ஒசேன் தோமஸ், ஆந்ரே ரஸ்ஸல் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், ஆந்ரே ரஸ்ஸல் மற்றும் ஹெய்டன் வோல்ஷ் ஆகியோர் களத்தில் இருக்க மிட்செல் ஸ்டாக் பந்து வீசினார். அவர் இறுதி ஓவரை சிறப்பாக வீசி 6 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
முதல் மூன்று போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி தோல்வியடைந்து தொடரை இழந்திருந்தாலும் அவுஸ்ரேலியா அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்துள்ளது.
இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லெண்ட்ல் சிமோன்ஸ் 72 ஓட்டங்களையும் எவீன் லுயிஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் ஆடம் செம்பா 2 விக்கெட்டுகளையும் ரிலே மெரிடித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மிட்செல் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.