நடப்பு சம்பியனும் உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இருந்து நடப்பு சம்பியனும் உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் விலகுவதாக அறிவித்தார்.
அத்துடன் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 27 வயதான டொமினிக் திம் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டுக்கான எஞ்சிய சீசனையும் நான் தவறவிடுகிறேன். அமெரிக்க ஓபன் பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை.
வைத்தியர்களின் அறிவுறுத்தலின்படி போதிய மருத்துவ சிகிச்சை எடுத்து மீண்டும் பயிற்சியை தொடங்குகையில் வலி ஏற்பட்டதால் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை பெற்றேன். காயம் குணமடைய கூடுதல் காலம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தி இருப்பதால் அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.