இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் எவின் லூயிஸ் மட்டும் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க சோபிக்க தவறிய ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நதன் குல்டர்நைல் 14 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 91 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக இசான் கிசான் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.