மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கொவிட் தொற்றுப் பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (புதன்கிழமை) புதிதாக மேலும் 3,635 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. 12பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 207,975ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு 442ஆக உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்தது. கொரோனா நெருக்கடி தொடங்கியது முதல் அங்கு பதிவான ஆக அதிகமான நாளொன்றுக்கான தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
இந்தநிலையில், இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக தடுப்பூசி வீதம், பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவது ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
மேலும், மிதமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது, வலுப்படுத்துவது ஆகிய உத்திகளையும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கையாண்டு வருகிறது’ என கூறினார்.
ஆண்டுக்கு இரண்டாயிரம் பேர் இறக்கும் பட்சத்தில் அவர்களில் முதியவர்களும் முன்பே நோய்வாய்ப்பட்டவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.