ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) குழு 2இல் நடைபெற்ற போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 74 ஓட்டங்களையும் ராகுல் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், குல்பதீன் மற்றும் கரீம் ஜெனட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியா அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கரீம் ஜெனட் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் மொஹமட் நபி 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.