ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் முடிவை அமெரிக்கா முன்னெடுத்துச் சென்றால், தனது நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சீனா எச்சரித்துள்ளது.
உய்குர் முஸ்லிம்களின் கட்டாய உழைப்பு காரணமாக சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘ஸின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருள்களின் இறக்குமதியை தடை செய்வதற்கு அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது, சீனாவுக்கு எதிராக அவதூறு பரப்ப அமெரிக்கா எந்த வழிமுறையையும் பயன்படுத்தத் தயங்காது என்பதை நிரூபிக்கிறது.
இத்தகைய இறக்குமதி தடையை அமெரிக்கா அமல்படுத்தினால், அது சந்தைப் பொருளாதாரக் கொள்கை மற்றும் சர்வதேச வர்த்தக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். சீன நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நலன்களை அது கடுமையாக பாதிக்கும்.
அமெரிக்காவின் இந்தத் தவறான முடிவு கண்டனத்துக்குரியது. இந்தத் தவறை அமெரிக்கா உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும்.
அதனை மீறி ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் முடிவை அமெரிக்கா முன்னெடுத்துச் சென்றால், தனது நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான பதில் நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும்’ என கூறினார்.