பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சுப்பர் ராய் புயலால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
சுப்பர் சூறாவளி ராயினால், வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் சமூக கட்டடங்கள் முழுமையாக அழிந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் கார்டன் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு ஹையான் சூறாவளி என்று அழைக்கப்படும் அந்த புயல் நாட்டை தாக்கியதில் 6,000க்கும் அதிகமானோர் இறந்தனர். இது நாட்டின் மிக மோசமான புயலாக பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளி பிலிப்பைன்ஸைத் தாக்குகின்றன.