பிலிப்பைன்ஸை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்ந்துள்ளது.
இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 56பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் உள்ளூர் பொலிஸ்துறை தெரிவிக்கிறது.
ராய் சூறாவளியின் காரணமாக அப்பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் உண்டான இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிடுவது மிகவும் கடினமானதாக உள்ளது.
மிகவும் பரவலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
வீதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளமை மற்றும் அதிகமான குப்பைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய முயற்சிக்கும் மீட்புப் பணியாளர்களுக்கு மேலும் சவால்களை அளிக்கின்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு, ராய் ‘பண்டிகைக் காலத்தில் ஒரு பயங்கரமான ஆச்சரியம்’ என்று அழைத்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளை ‘சுப்பர் டைஃபூன்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ‘ராய்’ சூறாவளி தாக்கியபோது மணிக்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியமை குறிப்பிடத்தக்கது.