சீனா, தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த அறிக்கை தயாரிக்க அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில், இதுதொடர்பான விரிவான அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஊடகம், இதுகுறித்து முழுமையான தகவல்களை வெளியிட நேபாள அரசாங்கம் தயங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய சில ஆண்டுகளில் நேபாள அரசாங்கம், சீனாவுடனான தன் உறவை மேம்படுத்திக்கொள்ள முயற்சித்து வந்தது.
இந்நிலையில், இந்த அறிக்கையின் முடிவுகள் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் நேபாள அரசாங்கத்தின் முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், இந்த பகுதியில் படையினரை நிறுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூம்லா மாவட்டத்தில் சீனாவின் அத்துமீறல் குறித்த தகவலைத் தொடர்ந்து, நேபாள அரசாங்கம் ஒரு பணிக்குழுவை அனுப்ப முடிவு செய்தது. இந்தக்குழுவில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசின் பிரதிநிதிகள் இருந்தனர்.
நேபாள எல்லைப் பகுதியில் உள்ள லாலுங்ஜோங் பகுதி கைலாய மலைக்கு அருகில் இருப்பதால் பாரம்பரியமாக யாத்ரீகர்களை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக இது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு புனிதமான இடம்.
ஆனால், இந்தப் பகுதியில் சமய நடவடிக்கைகளை கூட சீனப் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாக னேபாள அரசின் பணிக்குழு அறிக்கை கூறியுள்ளது. மேலும், நேபாள விவசாயிகளின் கால்நடை மேய்ச்சலை சீனா கட்டுப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சீனா எல்லைத் தூண் அருகே வேலி அமைத்து, நேபாளப் பகுதியில் கால்வாயை ஒட்டி சாலை அமைக்க முயற்சிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நேபாளப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் சீனக் கட்டடங்கள் உண்மையில் சீனாவின் பகுதிக்கு உள்ளேதான் கட்டப்பட்டிருக்கிறது என்றும் பணிக்குழு கண்டறிந்தது.
1960ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளுமே தொலைதூரப் பகுதிகளாக இருப்பதால் அங்கு செல்வது எளிதல்ல.
தரைப்பகுதியில் எல்லையானது தூண்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப்பகுதி வரையறைகளைப் புரிந்துகொள்வதே கடினம்தான். நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கி.மீ உள்ளது.