சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்மிங்கில் இருந்து அந்நாட்டு உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பகல் 1.10 மணிக்கு போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது.
குவாங்ஜோ விமான நிலையத்துக்கு பகல் 2.52 மணிக்கு வந்து சேர வேண்டிய இந்த விமானம், உரிய நேரத்தில் வராததால் தேடுதல் பணி நடைபெற்றது.
அப்போது இந்த விமானம் ஹூஜோ நகரத்தில் உள்ள டெங்ஷியானில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது
கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது என்று அவசர மேலாண்மைத் துறை தெரிவித்ததாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் ஜின்ஹூவா அறிவித்தது.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று சிசிடிவி எனப்படும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குளான சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132பேர் இருந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் 23 தீயணைப்பு வாகனங்களி;ல் 117 வீரர்கள் முதலில் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் பிற பகுதிகளில் இருந்து 538 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், விமான பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவவும் 9 குழுக்களை சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அமைத்துள்ளது.
விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிடத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், மீட்பு பணிகளை முடுக்கி விடமும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.