ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வயது வந்த இரண்டு மகள்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
புடினின் வயதுவந்த மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும் மரியா விளாடிமிரோவ்னா வொரொன்ட்சோவா ஆகியோர் மீதே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மகள் யெகாடெரினா செர்ஜியேவ்னா வினோகுரோவா மீதும் பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.
பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள், புடின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் முக்கிய வங்கிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சமீபத்திய வாரங்களில் ஒருங்கிணைந்த பிரித்தானிய மற்றும் சர்வதேச தடைகளால் புட்டினின் 275 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் போரை நடத்தும் ஜனாதிபதி புடினின் திறனை பொருளாதாரத் தடைகள் தாக்கியதால், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யா ஆழ்ந்த மந்தநிலையை நோக்கிச் செல்கிறது என்று அது மேலும் கூறியது.