தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி சமநிலைப்படுத்தியுள்ளது.
ராஜ்கோட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் கார்திக் 55 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்சன், பிரிடோரியஸ், நோட்ஜே மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 87 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெண்டர் டுஸன் 20 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அவிஷ்கான் 4 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளையும் ஹர்சல் பட்டேல் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் கார்திக் தெரிவுசெய்யப்பட்டார்.